Friday, November 25, 2011

ஒருபொருட் பன்மொழி

சூரியனின் வேறு பெயர்கள்
      
   கதிரவன்
   வெய்யோன்
   பகலவன்
   ஆதவன் 
   செங்கதிர்
   பரிதி
   எல்லி
   கனலி
   இரவி

கவியும் கருத்தும்-3

திருவருட்பா : 4091 - அருள் மாலை விளக்கம்
     இராமலிங்க அடிகள்
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
   குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
    உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
     மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
      ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந்  தருளே


பொருள்:        
        "வெயில் காலத்தில் இளைப்பாறுவதற்குத் தகுந்த குளிர்ந்த மரம் பான்றவனே! அம்மரம் தருகின்ற குளிர்ந்த நிழல் போன்றவனே! அம்மரத்தில் அந்நிழலில் கனிந்த கனி போன்றவனே! அம்மரம் அமைந்த சூழலினூடனே ஓடும் நீரோடையில் சுரக்கும் இன்சுவை பொருந்திய தண்ணீர் போன்றவனே! அத்தண்ணீரில் மலர்ந்திருக்கும் நறுமணம் கமழும் அழகிய மலர் போன்றவனே! ஓடையருகே உள்ளே மேடையிலே வீசும் மென்மையான பூங்காறைப் போன்றவனே! அந்த மென்காற்றினால் உடலில் உண்டாகும் சுகம் போன்றவனே! அச்சுகத்தின் பயனாகியவனே! நீ அம்பலத்தே ஆடும்போதே என் உள்ளத்தில் முடிகொண்டவனே! என் சொல்மாலையை ஏற்று அருளுக".

Friday, April 1, 2011

கவியும் கருத்தும்-2

திருவருட்பா (4090) - அருள்மாலை விளக்கம்
இராமலிங்க அடிகள்
அருள்விளக்கே! அருட்சுடரே! அருட்சோதிச் சிவமே!
     அருள்அமுதே! அருள்நிறைவே! அருள்வடிவப் பொருளே!
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே!
     என்அறிவே! என்உயிரே! எனக்கினிய உறவே!
மருள்கடிந்த மாமணியே! மாற்றறியாப் பொன்னே!
     மன்றில்நடம் புரிகின்ற மணவாளா! எனக்கே
தெருள்அளித்த திருவாளா! ஞானஉரு வாளா! 
     தெய்வநடத் தரசே!நான் செய்மொழிஏற் றருளே!
பொருள்    
அருள்விளக்காகவும்,சுடராகவும்,சோதியாகவும் விளங்குகின்ற ஒளிமயமான பரம்பொருளே! அருள் அமுதாகவும், அவ்வமுது குறையாமல் நிறைந்துள்ள பொருளாகவும், ஞான வடிவமாகவும் விளங்குகின்ற இறைவனே! என் உள்ளத்து இருளை நீக்கி அவ்விடத்தே நிலைத்து நின்று என்னை ஆட்கொண்ட தலைவனே! என்னுடைய அறிவாகவும், உயிராகவும், எனக்கு இனிய உறவாகவும் விளங்குகின்ற பெருமானே! மாயை முதலிய மயக்கங்களை நீக்கியருளிய மாணிக்கமே! இவ்வுலகில் ஈடு இணையில்லாப் பொருளே! அம்பலத்தில் ஆடுகின்ற மணவாளனே! எனக்கு ஞான விளக்கத்தைத் தந்த திருவாளனே! அந்த ஞானத்தின் வடிவாய் விளங்குபவனே! என்னுடைய சொல்மாலையை ஏற்று அருள் செய்க!

Thursday, March 31, 2011

கட்டுரை-2

கௌதமபுத்தர் வாழ்க்கை வரலாறு

முன்னுரை
   
உலகத்திலே அறம் குன்றி, மறம் வளர்ந்து மக்கள் அல்லலுறுங் காலங்களிலெல்லாம் புத்தர்கள் தோன்றி அறவழியைப் புகட்டி மக்களை நல்வழிப்படுத்துகிறார்கள் என்பதும், பற்பல கற்பகாலங்களில் கணக்கற்ற புத்தர்கள் தோன்றி அறநெறியை நாட்டிச் சென்றார்கள் என்பதும், இப்போது நடைபெறுகிற இந்தக் கற்பகாலத்திலே இருபத்தைந்து புத்தர்கள் தோன்றினார்கள் என்பதும் அவர்களுள் கடைசியாக வந்தவர் கௌதமபுத்தர் என்பதும் பௌத்தசமயக் கொள்கைகள். இனி வரப்போகிற புத்தரது பெயர் மயித்ரேய புத்தர் என்பதும், அவர் இப்போது துடிதலோகம் என்னும் தெய்வலோகத்திலே நாததேவர் என்னும் பெயருடன் இருக்கிறார் என்பதும் அந்த மதக் கொள்கைகளாம். பல புத்தர்கள் இருந்தார்கள் என்று பௌத்த சமய நூல்கள் கூறினாலும் சரித்திர நூலோர், கௌதமபுத்தரை மட்டும் சரித்திரகாலப் புத்தர் என்று கொள்கிறார்கள். கௌதமபுத்தருடைய வரலாறு தனி நூல்களாக எழுதப்பட்டுள்ளன வாகையினாலே, ஈண்டு அவரது வரலாற்றை மிகச் சுருக்கமாகக் கூறுகிறோம்.

கௌதமபுத்தர் வாழ்க்கை வரலாறு

  சாக்கிய குலத்திலே கௌதம குடும்பத்தைச் சேர்ந்த சுத்தோதனர் என்னும் அரசர் கபிலவத்து என்னும் ஊரை அரசாண்டு வந்தார். கபிலவத்து இமயமலை அடிவாரத்திலே இப்போதைய நேபாள நாட்டில் இருந்தது. சுத்தோதன அரசருக்கும் அவர் மனைவியராகிய மாயாதேவிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. கி.மு. ஆறாம் நூற்றாண்டிலே, அஃதாவது ஏறக்குறைய கி.மு 563இல் இந்தக் குழந்தை பிறந்ததாகச் சரித்திர நூலோர் கூறுவர். இக் குழவிக்குச் சித்தார்த்தர் என்று பெயர் சூட்டினார்கள். இக் குழந்தைதான் பிற்காலத்திலே புத்தர் பெருமானாக விளங்கியது.

  சித்தார்த்தர் பெரியவனானால் துறவியாய் விடுவார் என்று நிமித்திகர் கூறியதைக் கேட்டு, அரசன் மனம் வருந்தி, அக்குழந்தைக்குத் துறவு பூணும் எண்ணம் தோன்றாமலிருக்கும் பொருட்டு அதனைச் செல்வத்திலும் சுகபோகங்களிலும் திளைத்துவரச் செய்தார். உலக வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றாதபடி இன்ப சுகங்களைக் கொடுத்துவந்தார். குழந்தை வளர்ந்து பதினாறு வயதுள்ள குமாரனான போது அவருக்கு விருப்பமுள்ள ஓர் அரசிளங்குமரியை மணம் செய்து வைத்தார். சித்தார்த்த குமாரனுடைய இருபத்தொன்பதாவது ஆண்டிலே அவருக்கு இராகுலன் என்னும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அன்றைக்கே, சித்தார்த்தர் துறவு கொள்வதற்குக் காரணமான நிகழ்ச்சிகள் ஏற்பட்டன.

  வயது முதிர்ந்த "தொண்டு" கிழவர், கடும்பிணியினால் வருந்தும் நோயாளிகள், இறந்துபட்ட உடலாகிய பிணம் முதலிய துன்பக் காட்சிகளைச் சித்தார்த்தர் காண்பதற்கு வாய்ப்பில்லாதபடி அவரின் தந்தையார் ஏற்பாடு செய்திருந்தும், இக் காட்சிகளை யெல்லாம் அவர் காணும்படி நேரிட்டது. மிகவும் வயது முதிர்ந்த தள்ளாத கிழவர் ஒருவரை அவர் கண்டார். பிறகு, கொடிய நோயினால் வருந்தி வாய்விட்டலறிய ஒரு நோயாளியையும், உயிர் நீங்கிப் பிணமாகக் கிடந்த ஒரு மனித உடலினையும் அவர் காண நேரிட்டது. பின்னர், துறவி ஒருவரைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. துறவற வாழ்க்கை கவலையற்ற இன்ப வாழ்க்கை என்று அவர் கண்டார். மேலே கூறிய காட்சிகளை எல்லாம் காணப் பெற்ற சித்தார்த்தருக்கு, மனித வாழ்க்கை துன்பத்தில் சூழப்பட்டது என்றும், துன்ப வாழ்க்கையிலிருந்து நீங்கி நிலைத்த இன்பநெறியைக் கண்டுபிடித்து உலகத்தாரை உய்விக்க வேண்டும் என்றும் பேரவா உண்டாயிற்று. ஆகவே, அவர், அன்று நள்ளிரவிலே தம் ஒரே மகனையும், மனைவியையும், தாய் தந்தையரையும், இன்ப சுகங்களையும், அரச உரிமையையும், செல்வங்களையும், சுக போகங்களையும் துறந்து காட்டிற்குச் சென்றார்.

  முதலில் ஆளார காலாமர் என்பவர் இடத்திலும், பிறகு, உத்தக ராமபுத்திரர் என்பவர் இடத்திலும் சீடராக அமர்ந்து அவர்கள் காட்டிய வழியில் ஒழுகினார். விரைவிலே, அவர்கள் காட்டிய நெறி மக்களை உய்விக்கும் நெறியன்றென்று கண்டு, அவர்களை விட்டு உருவேல் என்னும் இடத்திற் சென்று, உண்ணாவிரதம் பூண்டு கடுந்தபசு செய்தார். அப்போது ஐந்து துறவிகள் இவரையடுத்து இவருடன் இருந்தார்கள். உணவு கொள்ளாமல் உடலை வாட்டி ஒடுக்கிக் கடுந்தபசு செய்தமையினாலே, குருதியும் தசையும் வற்றி எலும்பும் நரம்பும் தெரியும்படி உடல் நலிந்து வலிவு இல்லாமல் மயங்கி விழுந்தார். அதன்பிறகு, அளவுக்கு மிஞ்சி உடம்பைப் பட்டினியால் வாட்டுவது தவறு என்றும், அது மெய்ஞ்ஞானம் பெற வழியன்றென்றும் கண்டு அன்று முதல் சிறிதளவு உணவு கொள்ளத் துணிந்தார். இதனைக்கண்ட இவருடன் இருந்த பிக்குகள் இவரைவிட்டுப் போய்விட்டார்கள். கடைசியாகப் போதி (அரச) மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் இருந்தபோது மெய்ஞ்ஞான ஒளியைக் காணப் பெற்றார். மெய்ஞ்ஞான ஒளியைக் கண்ட சித்தார்த்தர் புத்தர் ஆனார். ஞானமாகிய போதி கைவரப்பெற்று, பிறவித் துன்பத்தைக் கடந்து பிறவாமையாகிய இன்ப நெறியைக் கண்டார். அப்போது அவருக்கு வயது முப்பத்தைந்து.

   பிறகு, புத்தர் தம்மை விட்டுச் சென்ற ஐந்து பிக்குகளைத் தேடிச்சென்று அவர்களுக்குத் தாம் கண்ட உண்மைகளைப் போதித்தார். அவர்கள் இவர்தம் உபதேசங்களைக் கேட்டு இவருக்குச் சீடர் ஆனார்கள். பிறகு, பல துறவிகள் இவருக்குச் சீடர் ஆயினர். அறுபதுபேர் சீடரானவுடன் அவர்களை ஊரெங்கும் அனுப்பித் தமது பௌத்த மதத்தைப் போதிக்கச் செய்தார். தாமும் பல இடங்களுக்குச் சென்று போதித்தார். இவரது புதிய உபதேசத்தைக் கேட்டு, வேறு மதத் துறவிகளும் கூட்டங் கூட்டமாகப் பௌத்த மதத்தில் சேர்ந்தார்கள். துறவிகள் மட்டும் அன்று; இல்லறத்தாராகிய அரசர்களும், நிலக் கிழார்களும், வணிகரும், செல்வந்தரும், பாமரமக்களும் பௌத்த மதத்தை மேற்கொண்டார்கள். நாற்பத்தைந்து ஆண்டுகள் நாடெங்கும் சுற்றித் திரிந்து புத்தர் தமது கொள்கையைப் போதித்தார்.

  துறவிகளாகிய பிக்குகளும் பிக்குணிகளும் ஒழுக வேண்டிய முறைகளை வகுத்தார். பிக்கு சங்கத்தை ஏற்படுத்தினார். அரசர்களும், பிரபுக்களும் பிக்குகள் தங்குவதற்கு விகாரைகளையும் பள்ளிகளையும் அமைத்துக் கொடுத்து நிலபுலங்களைத் தானம் வழங்கினார்கள்.   இவரது முதுமைக் காலத்தில் இவருக்கு மாறாகச் சிலர் கிளம்பி இவர் உண்டாக்கிய பௌத்த மதத்தில் பிளவு உண்டாக்க முயன்றனர். ஆனால், இவர் பிளவு ஏற்படாதபடி செய்தார்.

  புத்தர் பெருமான் தமது எண்பதாவது ஆண்டில் கி.மு 483 இல் ருசி நகரத்தில் நிர்வாண மோட்சம் அடைந்தார். ருசி நகரத்தார் இவர் உடலுக்கு இறுதிக் கடமைகளைச் செய்தார்கள். கொளுத்தப்பட்டு எஞ்சிய உடம்பின் சாம்பலும் எலும்பும் எட்டுப் பகுதியாகப் பகுக்கப்பட்டு எட்டு ஊர்களில் புதைக்கப்பட்டு அவற்றின்மேல் சைத்தியாலயங்கள் கட்டப் பட்டன.
  புத்தருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சாரிபுத்திரர், மொக்கலானார் (மௌத்தல்யானர்), மகாகாசிபர், உபாலி, ஆநந்தர், அனுருத்தர், காத்யானார் முதலானவர். மகத நாட்டரசர் பிம்பசாரரும், கோசல நாட்டரசர் பசேனதி (பிரசேனஜித்) என்பவரும் இவருடைய சீடர்களாயிருந்து இவரது மதம் பரவுவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்தார்கள்.
புத்தர் காட்டிய பாதை

  புத்தர் ஆன்மீக விழிப்புக்கான ஒரு பாதையைக் கற்றுக் கொடுத்ததோடு நாம் தினசரி வாழ்வில் பயன்படுத்த வேண்டிய ஒரு 'கோட்பாட்டையும்' காண்பித்தார். இந்தக் கோட்பாட்டுக்கான பாதையை, ஒன்றுக்கொன்று துணைநிற்கும் மூன்று அம்சங்களாகப் பிரிக்கலாம் - அவை நற்பண்பு, தியானம் மற்றும் அறிவுடைமை.

"நேர்மை இருக்கும் இடத்தில், அறிவுடைமை உள்ளது, அறிவுடைமை இருக்கும் இடத்தில் நேர்மை உள்ளது. நேர்மையானவர்களிடம் அறிவுடைமை உள்ளது, அறிஞர்களிடம் நேர்மை உள்ளது. அறிவுடைமையும் நேர்மையும் உலகில் சிறந்தவைகளாகக் கூறப்படுகின்றன."

1. நற்பண்பு

   புத்தரின் கோட்பாட்டுக்கான பாதையில் செல்ல விரும்புவோர், சம்பிரதாயப்படி உறுதி மொழி எடுக்கலாம். மூன்று புகலிடங்கள் மற்றும் ஐந்து நல்லொழுக்க உபதேசங்களைப் பௌத்த விகாரங்களுக்குச் (துறவிகள் வசிக்கும் ஆசிரமம்) சென்று ஆண் அல்லது பெண் துறவியிடம் உபதேசம் பெற்றுக் கொள்ளலாம். அல்லது நீங்களே உங்கள் வீட்டிலேயே உறுதி மொழி எடுத்துக் கொள்ளலாம். மூன்று புகலிடங்களை ஏற்றுக்கொண்டால் நம் வாழ்க்கையை அறிவுடைமை, வாய்மை மற்றும் நற்பண்பு ஆகிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இணங்கப் புத்தர் கற்றுக்கொடுத்தப்படி, புத்தரை முன்னுதாரணமாக வைத்து நடந்து கொள்ள வேண்டும். ஐந்து நல்லொழுக்க உபதேசங்கள் என்பன நம் தினசரி வாழ்வில் கடைபிடிக்க உதவும் பயிற்சி விதிகளாகும்:
   எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்த்தல், கொடுக்காத எப்பொருளையும் எடுப்பதைத் தவிர்த்தல், தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருத்தல், தவறான பேச்சு உரைக்காமல் இருத்தல் (பொய் சொல்வதும், வதந்தி கிளப்புவதும், கடுமையாகப் பேசுவதும், வம்பளப்பதும் தவிர்த்தல்), போதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்த்தல்.

  மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையில் வாழும் ஒருவருக்குத் தன்னடக்கமும் தியானஞ் செய்யக் கவனமாகப் பேணிவளர்க்க வேண்டிய நுண்ணிய உணர்வும் வளர்கிறது.  தியானம்தான் புத்தர் காட்டிய பாதையின் இரண்டாவது அம்சம்.

2. தியானம்

   பொதுவாக, பேச்சு வழக்கில் கூறப்படும் தியானம் என்பது மனப் பார்வையை ஒரு உருவத்தின் மேலோ, வார்த்தையின் மேலோ, தலைப்பின் மேலோ திரும்பத் திரும்பக் கவனம் செலுத்தி, மனதை அமைதிப்படுத்தி, அந்த உருவத்தின் அல்லது வார்த்தையின் பொருளைத் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்ப்பதுதான். பௌத்த ஆழ்ந்த அறிவு தியான (விபாஸனா) வழியில் இதற்கு மற்றொரு நோக்கமும் உள்ளது - அது மனதின் இயல்பான குணத்தை மேலும் புரிந்துக்கொள்வதுதான். தியானப் பொருளை ஒரு அசையாத குறியாக வைத்தால், மனதின் வெளித்தோற்றத்தில் நடைபெறும் செயல்களால் புதைக்கப் பட்டுள்ள அடிமனப்போக்கைத் தெளிவுபடுத்த உதவும். புத்தர் தனது சீடர்களைத் தங்கள் உடம்பையும், மனத்தையும் தியானப் பொருளாகப் பயன்படுத்த ஊக்கமளித்தார். உதாரணத்திற்கு, சாதாரணமாக மூச்செடுக்கும்போது உருவாகும் உணர்ச்சிகள் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு தியானப் பொருள். அசையாது உட்கார்ந்து, கண்களை மூடி, மூச்சின் மேல் கவனம் செலுத்தினால் ஒரு காலக் கட்டத்தில் தெளிவும் அமைதியும் தோன்றும். இந்த மனநிலையில், கொந்தளிக்கும் மன நிலைமைகள், எதிர் பார்ப்புகள், அடிக்கடி நிகழ்கிற மனோபாவங்கள் எல்லாம் தெளிவுபெற்று, அமைதியான ஆனால் தெளிவான விசாரணையினால் விடுபட்டு விடுகின்றன.

   தியான நிலையை ஓர் இடத்தில் அசையாது உட்கார்ந்து மட்டும் அல்லாமல், அன்றாடச் செயல்களைச் செய்யும்போதும் அடையலாம் என்று புத்தர் கற்றுத் தந்தார். கவனத்தை உடலின் அசைவுகளின் மேலும், ஏற்படும் உடல் உணர்ச்சிகளின் மேலும், மனதில் தோன்றும் மனோநிலைகள் மற்றும் எண்ணங்கள் மீதும் செலுத்தலாம். இந்த நடமாடும் கவனம் 'விழிப்புடன் இருத்தல்' என்று சொல்லப்படும்.

   விழிப்புடன் இருப்பதால் சாந்தமான ஒரு கவனத்தை அறிந்து கொள்கிறோம் என்று புத்தர் தெளிவுபடுத்தினார். உடலையும் மனதையும் மையமாக வைத்திருந்தாலும் இந்தக் கவனமானது எந்த ஒரு உடல் அல்லது மன அனுபவத்தோடும் பட்சபாதமில்லாமலும் கட்டுப்படாமலும் இருக்கிறது. இந்த விலகின மனநிலையானது பௌத்தர்களால் நிர்வாணா (பாலி மொழியில் நிப்பாணா) - அமைதியும் மகிழ்ச்சியும் கலந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதிக்கப்படாத மனநிலை - என்று கூறப்படுகிற மனநிலைக்கு ஒரு முன்னோடி. நிர்வாணா என்பது ஒரு இயற்கையான நிலை. நம் இயற்கையான நிலையோடு சேர வேண்டிய ஒன்று இல்லை. மன அழுத்தங்களும் குழம்பிய பழக்கங்களும் இல்லாத போது நம் மனநிலை அப்படித்தான் இருக்கும். உறக்கத்திலிருந்து விழிக்கும் போது எப்படிக் கனவு நிலை மறைகிறதோ, அதேபோல விழிப்புடன் இருப்பதால் தெளிவடையும் மனமானது ஆட்டிப்படைக்கும் எண்ணங்களாலும், சந்தேகங்களாலும், கவலைகளாலும் பாதிக்கப் படுவதில்லை.
   விழிப்புடன் இருத்தல் நாம் பயன்படுத்தும் அடிப்படையான கருவி என்றாலும், நம்மைப் பற்றிச் சரியான கருத்தினை நிறுவவும் விழிப்புடன் இருத்தலால் தெளிவாவதை மதிப்பீடு செய்யவும் பொதுவாகச் சில யோசனைக் குறிப்புகள் தேவைப்படுகிறது. இந்த குறிப்புகள்தான் புத்தரின் நுண்ணறிவுப் போதனைகளினால் கிடைக்கின்றன. 

3. நுண்ணறிவு

   பொதுவாக பயன்படுத்தப்படும் புத்தரின் நுண்ணறிவுப் போதனைகள் கடவுளைப் பற்றிய அல்லது அடிப்படையான உண்மையைப் பற்றிய அறிக்கைகள் அல்ல. அப்படிப்பட்ட அறிக்கைகளாக இருந்தால் அது கருத்து வேறுபாடுகளுக்கும், முரண்பட்ட பேச்சு வார்த்தைக்கும், வன்செயலுக்கும்கூட இடம் கொடுக்கும் என்று புத்தர் கருதினார். அதற்கு மாறாகப் பௌத்த நுண்ணறிவு நம்பிக்கை என்று ஒன்றை ஏற்றுக் கொள்ளாமல் நம் வாழ்க்கையைப் பற்றி நாமே என்ன கவனிக்கிறோமோ அதை விளக்குகிறது. பௌத்தப் போதனைகள் நமது அனுபவங்களோடு பரிசோதனை செய்து பார்க்கப்பட வேண்டும். பல்வேறு மக்கள் வாய்மையைப் பலவிதமாக வெளிப்படுத்துவார்கள்; நாம் எதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றால் நம் அனுபவங்கள் எவ்வளவு நியாயப் பூர்வமானவையாக இருக்கின்றன என்பதும், அவை நமக்கு மேலும் அறிவூட்டவும் கருணையோடு வாழ்வை நடத்தவும் வழி வகுக்கிறதா என்பதுதான். போதனைகள் மனக்கசப்பு நீங்க வழிவகுக்கும் கருவிகளாக விளங்குகின்றன. மனம் தெளிவான பிறகு அடிப்படையான உண்மை - அதை எவ்விதத்தில் வெளிப்படுத்தி னாலும் சரி - வெளிப்படையாகிறது.

முடிவுரை

   பலவிதமான சமய வழக்கங்கள் பௌத்த மதத்தோடு இணைக்கப் பட்டுள்ளன. ஆனால் இவை எல்லாம் 'சித்தாத்த கோதமா' என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் வாழ்ந்த ஞானியின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவர் தான் பிற்காலத்தில் 'புத்தர்' - அதாவது 'விழிப்பு அடைந்தவர்' என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவர் தன் சுய முயற்சியாலேயே ஞானம் பெற்றார். புத்தர் எதையும் எழுதி வைக்கவில்லை. ஆனால் அவர் கற்பித்த போற்றத்தக்க வாய்மை (தர்மம்) அவர் காண்பித்த சமய வழியைப் பின்பற்றிய சீடர்களால் (சங்கம் என்று அழைக்கப்படுவர்) வாய்மொழிச் சொல்லாகப் பரவி உலகில் நிலை பெற்றது. அவர் தம் வாழ்நாளில் 45 ஆண்டுகள் சங்கத்திற்கு வழி காட்டியாக விளங்கினார்.

கட்டுரை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

முன்னுரை

   பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகிய நால்வருமாவர். அவருள், பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்; பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்; நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர். ஆயின், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாரா இனிமைக் கவிஞர், எளிமைக் கவிஞர், உண்மைக் கவிஞர், உணர்ச்சிக் கவிஞர் எனக் கூறுதல் சாலப் பொருந்தும். இவர் தேனொழுகக் கவிபாடுவதில் வல்லவர். கவிதை நூல்களோடு பல ஆராய்ச்சி நூல்களையும் இவர் படைத்துள்ளார்.

வாழ்க்கை வரலாறு

   கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தேரூரில் 1876 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 27ம் நாள் வேளாளர் குலத்தில் சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் வாழ்ந்து வந்த நாஞ்சில்நாடு மலையாள நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால், பள்ளியில் மலையாள மொழி கற்க வேண்டியவரானார். எனினும் தேரூரை அடுத்த வாணன்திட்டிலிருந்த திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிபுனையும் ஆற்றலும் கைவரப் பெற்றார். ஆரம்பப் பள்ளிக் கல்விக்குப்பின் கோட்டாறு அரசுப் பள்ளியில் பயின்றார். திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

   கோட்டாற்றில் மத்தியதரப் பாடசாலையின் உதவி ஆசிரியராகவும், பின்னர் நாகர்கோவில் போதனா முறைப் பாடசாலையிலும் திருவனந்தை பெண் போதனா முறைப் பாடசாலையிலும் உதவியாசிரியராகவும் அமர்ந்தார். விஞ்ஞான ஆசிரியராகவே பணிபுரிந்தார். ஆனால் இலக்கியக் கல்வியில் தொடர்ந்து தன்னைக் கரைத்துக்கொண்டு வந்தார். மேலும் மேலும் நூல்களைக் கற்பதும் ஆராய்ச்சி செய்வதும் பாடல்களை இயற்றுவதும் இவரது அன்றாட வாழ்க்கையாயிற்று. தமிழ்க்கல்வியும் ஆங்கிலக் கல்வியும் கவிமணியின் பண்பாட்டுணர்ச்சியை மிகவும் ஆழமாக வளர்த்தன.

   ஓர் அறிவியல் கண்ணோட்டம் இயல்பாக இவரிடம் வெளிப்பட்டது. அத்துடன் நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் இயல்பாக வெளிப்பட்டது. அதுகாறுமான மரபுவழிச் சிந்தனை அணுகுமுறைகளுடன் புதிய நவீனப் பாங்குடைய சிந்தனைச் சேகரமும் கவிமணியின் பார்வையை ஆழப்படுத்தியது. அகலப்படுத்தியது. முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாள ராகவும் பணிபுரிந்து, 1931ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் தம் மனைவியின் ஊராகிய புத்தேரியில் தங்கிக் கவிதை இயற்றுவதிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.

   சுசீந்திரம் என்கிற ஊரின் அருகாமையிலுள்ள எழில் நிறைந்த தேரூர் என்னும் சிற்றூர் இவரது சொந்த ஊரானாலும், நாகர்கோவில் நகரை அடுத்த புத்தேரி' என்கிற ஊரில்தான் கடைசிவரை வாழ்ந்து 1954ல் நம்மை விட்டு பிரிந்தார்.

இலக்கியப் படைப்புகள்

   இந்த நூற்றாண்டில் எழுந்த இனிய கவிதைகளில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் புகழ் பெற்றவை. பழைய மரபின்படியும் புதிய முறைகளின்படியும் பல புதிய சோதனை முயற்சிகளைக் கவிதைகளில் செயல்படுத்த வேண்டுமென்று முனைப்புடன் இயங்கியவர். போராட்டமும், பரபரப்பும் மிகுந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தபோதும்கூட இவருடைய கவிதைகளில் அமைதியும், இனிமையும் இழையோடிக் கொண்டிருந்தது. வெண்பாக்களின் வழியாகச் சொல்ல வந்ததை எளிமையாகவும், தெளிவாகவும் கையாண்டவர்.
   - பக்திப் பாடல்கள், 
   - இலக்கியம் பற்றிய பாடல்கள், 
   - வரலாற்று நோக்குடைய கவிதைகள், 
   - குழந்தைப் பாடல்கள், 
   - இயற்கைப் பாட்டுகள், 
   - வாழ்வியல் போராட்டக் கவிதைகள், 
   - சமூகப் பாடல்கள், 
   - தேசியப் பாடல்கள், 
   - வாழ்த்துப்பாக்கள், 
   - கையறுநிலைக் கவிதைகள், 
   - பல்சுவைப் பாக்கள்... என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
   மலரும் மாலையும்(1938), ஆசிய ஜோதி(1941), நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் (1942), உமார்கய்யாம் பாடல்கள்(1945), கதர் பிறந்த கதை(1947) ஆகிய கவிதைகளைப் படைத்துள்ளார். இவை மிக இலக்கியத்தரம் வாய்ந்தவை.

மலரும் மாலையும்

   பழந்தமிழ்ப்பண்பும், தமிழ்மணமும், புதுமைக் கருத்துகளும் நிறைந்த பல பாடல்களைக் கவிமணி எழுதியுள்ளார். இப்பாடல்களின் தொகுப்பே "மலரும் மாலையும்" என்னும் நூலகாக வெளியிடப் பெற்றது. இந்நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மூலம் கவிமணியின் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இறைவழிபாடு, சாதிபேதம் கடிதல், குழந்தைகளிடம் கொண்ட பற்று ஆகியவற்றை அறியலாம்.

பாட்டுக் கொருபுலவன் பாரதிஅடா! - அவன்
  பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான், அடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! - அந்தக்   
  கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!

சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா! - கவி
  துள்ளும் மறியைப்போலத் துள்ளுமே, அடா !
கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா ! - பசுங்
  கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா!

மருமக்கள்வழி மான்மியம்

   கவிமணியின் ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ மிகவும் பரபரப்பாக அக்காலத்தில் பேசப்பட்டது. இது சமுதாயச் சீர்கேடான ஒரு பழமையான வழக்கத்தின் தீமையை நீக்குதற்காகப் பாடப்பெற்ற ஒரு புரட்சிக்காவியம். மருமக்கள் வழி மான்மியம் என்பது திருவிதாங்கூரில் அக்காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த சொத்துரிமை சம்பந்தமான ஒரு ஏற்பாடு. சட்டம்போல் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த முறையின்படி ஒருவருக்குப் பிறந்த மகனுக்கோ, அல்லது மகளுக்கோ தகப்பனாரின் சொத்தில் உரிமை கிடையாது. மருமகன்(சகோதரியின் மகன்)களுக்கே தந்தையின் சொத்துகள் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அரசர்களுக்கும் அப்படித்தான். இவ்வாறுதான் திருவிதாங்கூரின் அரசர்கள் அனைவரும் ஆட்சிக்கு வந்தார்கள். இத்தகு புதுமையான நடைமுறையால், நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் மிகுந்த அல்லலுக்கு உட்பட்டனர். மன்னர்கள் கொண்டொழுகிய மருமக்கள் தாயமுறை, கேரள மக்களை மட்டுமன்றி, நாஞ்சில் நாட்டுத் தமிழர்களையும் பற்றிக் கொண்டது. கவிமணி இம்மாதிரியான ஏற்பாட்டிற்கும், சட்டங்களுக்கும் எதிர்ப்பாளர். இதனை அழித்தொழிக்கக் கவி ஆயுதம் ஏந்தினார். அதன் விளைவே 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழிமான்மியம்'!

   'தேவியின் கீர்த்தனங்கள்' என்ற இசைப் பாடல்களின் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல்கள் பலவற்றை இன்னிசை வித்தகர்கள் பலர் மேடைகளில் விரும்பிப் பாடுவது அந்தத் தொகுப்பின் சிறப்பு என்று கூறலாம். கவிமணியின் சொற்பொழிவுகளும் உரைநடைகளும் 'கவிமணியின் உரைமணிகள்' என நூலுருவம் பெற்றுள்ளது. இதன் மூலம் கவிமணியின் சிந்தனைப் பரப்பு எத்தகைய ஆழம் மற்றும் நவீனம் கொண்டது என்பது தெளிவாகிறது.
இனிமைக் கவிஞர்

   தேசம், மொழி, மக்கள், உலகம் எனப் பெரும் வட்டத்தைத் தன் பாடல்களுக்குள் அடக்கி சத்தமில்லாமல் தமிழ் உலகில் சஞ்சாரம் செய்தவர். சமரச நோக்கு, நீதிநெறி போன்ற அடிப்படைக் கருத்துகளை மையமாக வைத்து அழகிய ஆழமான அமரத் தன்மை மிகு தீஞ்சுவைத் தமிழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார்.

உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்
  உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
  தெரிந்து ரைப்பது கவிதை.

என்னும் கவிமணியின் கவிதை பற்றிய விளக்கம் அவரின் கவிதைகளுக்கு நன்கு பொருந்துவதாகும்.

   கவிமணி தமிழுக்குத் தொண்டாற்றிய புலவரைப் போற்றுகிறார். தமிழ்நூல்களின் சிறப்புகளைக் கூறுகிறார். தமிழ்மொழி வளரப் பழைமையோடு புதுமையையும் வரவேற்கின்றார். தமிழில் புதுப்புதுத் துறைகளைத் தோற்றுவித்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். "அறிவின் எல்லை கண்டோன், உலகை அளந்து கணக்கிட்டோன்," என வள்ளுவரையும், "நெல்லிக்கனியைத் தின்றுலகில் நீடுவாழும் தமிழ்க்கிழவி," என ஔவையாரையும், "இந்திர சாலமெல்லாம் கவியில் இயற்றிக்காட்டிடுவான்," எனக் கம்பரையும், "பாட்டைக் கேட்டு கிறுகிறுத்துப் போனேனேயடா, அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா," எனப் பாரதியையும் போற்றிக் கவியாரம் சூட்டுகிறார்.

குழந்தைக் கவிஞர்

கவிமணி ஒரு தலைசிறந்த குழந்தைக் கவிஞர். பெரியவர்களுக்கு மாத்திரம் என்று இல்லாமல், குழந்தைப் பாடல்கள் பலவும் மிகச்சிறப்பாக இயற்றியுள்ளார். இதுவரையிலான தமிழ் ஆளுமைகளில் குழந்தைகளின் பிரபஞ்சத்தில் சுதந்திரமாய் நுழைந்து உலவியர் கவிமணி ஒருவரே. குழந்தைகளுக்கான பாடல்களை கவிமணி அளவிற்கு இனி யாராலும் எழுதிவிட முடியாது என்பதை நிறுவியவர். "ஆங்கிலத்தில் உள்ளதைப் போல் தமிழில் குழந்தைப் பாடல்களில்லையே என்று நான் பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் சில பாடல்களை எழுதினேன்," என்று தன்னுடைய குழந்தைப் பாடல்கள் குறித்துக் கவிமணி சொல்கிறார். அவர் சொன்னதுபடியே தன் வாழ்வில் பெரும்பகுதியைக் குழந்தைப் பாடல்கள் எழுதுவதற்காகவே செலவிட்டவர். இவர் குழந்தைகளுக்காகத் தாய்மார் பாடும் தாலாட்டுப் பாடல்களையும், குழந்தைகள் தாமே பாடி மகிழத்தக்க எளிய அழகிய பாடல்களையும் பாடியுள்ளார்.

காக்கை, கோழி முதலிய பறவைகளைக் குழந்தை விளித்துப்பாடும் பாடல்கள் சுவைமிக்கன.

காக்காய்! காக்காய்! பறந்து வா 
கண்ணுக்கு மை கொண்டு வா 
கோழி! கோழி! கூவி வா 
குழந்தைக்குப் பூக்கொண்டு வா 

கோழி! கோழி! வா வா 
கொக்கொக்கோ என்று வா!
கோழி! ஓடி வா வா 
கொண்டைப் பூவைக் காட்டு வா

"தோட்டத்தில் மேயுது  வெள்ளைப்பசு - அங்கே 
   துள்ளிக் குதிக்குது  கன்றுக்குட்டி 
அம்மா என்றது  வெள்ளைப்பசு - உடன் 
   அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி."

போன்ற எளிமையான வருணனைகள் அடங்கிய வரிகளின்வழி குழந்தைகளின் உலகில் சிநேகிதமாய்ச் சஞ்சரித்தவர். எளிமையான பாடல்களின் மூலம் குழந்தைகளுக்கு அறிவு புகட்டவும் செய்தார்.
'தம்பியே பார், தங்கையே பார், சைக்கிள் வண்டி இதுவே பார்',
போன்ற குழந்தைப்பாடல்கள், அக்காலங்களில் ஆரம்பப் பள்ளிப் புத்தகங்களில் தவறாது இடம் பெறுவது வழக்கம்.

தான்கண்ட மெய்ம்மையான காந்தியத்தை;

 "கூனக்கிழவி நிலவினிலே - இராட்டில் 
   கொட்டை நூற்கும் பணி செய்வதை - இம் 
 மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே - காந்தி 
   மாமதி யோங்கி வளருதம்மா."

என்கிற இயற்கை வர்ணனையோடு ஒட்டிக் குழந்தைகளுக்குப் புரிய வைத்தவர். பல்வேறு உத்தி முறைகளில் பாடி குழந்தைப் பாடல்களைப் பல்வேறு தளத்திற்கும் பரவச் செய்தவர் கவிமணி.

சமுதாயக் கவிஞர்

   பாரதியாரைப் போலவே இவரும் தமிழ் மக்களிடையே வழங்கிவரும் சில நாட்டுப் பாடல்களின் இசை வடிவங்களைப் பயன்படுத்தித் "தீண்டாதோர் விண்ணப்பம்" என்ற பாடலையும் பாடியிருக்கிறார். அக்காலக் கட்டத்தின் சமூகக் கொடுமைகளுக்கும், அன்னியரின் அடிமைத்தனத்திற்கும் எதிரான கவிமணியின் பாடல்களில் தீர்க்கமான முற்போக்குப் பார்வையாளராக அவரை இனங்காண முடிகிறது.

"கண்ணப்பன் பூசை கொளும் 
   கடவுளர் திருக்கோவிலிலே நண்ணக் கூடாதோ நாங்கள் 
   நடையில் வரல் ஆகாதோ."

என்று தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலில் நுழைவதைப் பற்றி, சைவப்பிள்ளை ஆச்சார மரபிலிருந்து கொண்டு சிந்தித்தவர்.

"அல்லும் பகலும் உழைப்பவர்ஆர் - உள்ளத்து 
   அன்பு ததும்பி யெழுபவர்ஆர்? 
கல்லும் கனியும் கசிந்துருகித் - தெய்வக் 
   கற்பனை வேண்டித் தொழுபவர்ஆர்?"

எனப் பாடியதன் மூலம் அவர் காலத்தில் நிலவி வந்த பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்.
  
மனத்தூய்மையின்றிச் செய்யும் இறைவழிப்பாட்டினால் பயனில்லை என்பது கவிமணியின் கருத்து. இதனை வலியுறுத்தும் பாடல்:

"கண்ணுக் கினியன கண்டு - மனதைக் 
   காட்டில் அலைய விட்டு பண்ணிடும் பூசையாலே - தோழி 
   பயனொன்றில்லையடி 

உள்ளத்தில் உள்ளானடி - அது நீ 
   உணர வேண்டும் அடி உள்ளத்தில் காண்பாயெனில் - கோயில் 
   உள்ளேயும் காண்பாயடி."

விடுதலைக் கவிஞர்

   சுதந்திர வேட்கை தீயாய்க் கொழுந்துவிட்டுக் கொண்டிருந்த காலத்தில் காந்தியத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துச் சமாதானத்தை வலியுறுத்தியவர். காந்தியின் கொள்கையான மதுவிலக்கு குறித்து,

 "கள்ள ரக்கா! குலத்தோடு நீ 
   கப்ப லேறத் தாமதம் ஏன்? 
 வள்ளல் எங்கள் காந்தி மகான் 
   வாக்கு முற்றும் பலித்ததினி."

என்று உற்சாகமாய்ப் பாடுகிறார்.

   ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாகக் குதூகலித்த பாரதிக்குச் சுதந்திர இந்தியாவில் வாழக் கொடுத்து வைக்கவில்லை. ஆயின் கவிமணி விடுதலை பெற்ற இந்தியாவில் ஏழாண்டுகள் வாழும் பேறு பெற்றார். "பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பது நமது கடமை என்றும், உரிமை வாழ்வின் பயனை நினையாது வாதினை விளைவித்துச் சண்டை செய்வது தேவையற்றது," என்றும் வலியுறுத்தினார். நம்நாட்டு மக்களுக்கு ஊக்கமும் உழைப்பும் வேண்டும். "உண்ணும் உணவுக்கும், உடுக்கும் உடைக்கும் அந்நியரை நம்பி வாழ்தல் கூடாது." "பலதொழில்கள் செய்து பஞ்சப் பேயினைத் துரத்த வேண்டும்." "அண்ணல் காந்தியினை அடியொற்றி வாழ்வோம்," என்பதைக் கீழ்காணும் கவிதை வலியுறுத்தும்.

"ஆக்கம் வேண்டுமெனில் - நன்மை 
  அடைய வேண்டுமெனில் 
 ஊக்கம் வேண்டுமப்பா - ஓயாது 
  உழைக்க வேண்டுமப்பா 

 உண்ணும் உணவுக்கும் - இடுப்பில் 
  உடுக்கும் ஆடைக்கும் 
 மண்ணில் அந்நியரை - நம்பி 
  வாழ்தல் வாழ்வாமோ? 

 உண்ணும் உணவுக் கேங்காமல் 
  உடுக்கும் ஆடைக் கலையாமல் 
 பண்ணும் தொழில்கள் பலகாண்போம் 
  பஞ்சப் பேயைத் துரத்திடுவோம் 
 அண்ணல் காந்திவழி பற்றி 
  அகிலம் புகழ வாழ்ந்திடுவோம்."

   இந்தியாவில் சமாதானம் நிலவ வேண்டும் என்றில்லாமல், உலகம் முழுவதும் சமாதானம் நிலவ வேண்டுமென விரும்பியவர். இரண்டாம் உலகப் போரினால் மக்கள் அடைந்த துயரை, 

"போரில் எழுந்த பஞ்சம் - பாரத 
   பூமியைத் தாக்குதைய்யா 
நேருங் கொடுமை யெல்லாம் - நினைக்க 
   நெஞ்சு துடிக்குதைய்யா."

என்ற பாடலின் மூலம் விளக்குகிறார்.

உணர்ச்சிக் கவிஞர்

   அக்காலத்தில் நீதிமன்றச் செயல்பாடுகளை மிகவும் தைரியமாக விமர்சனம் செய்திருக்கிறார். ஒரு நீதிமன்றக் காட்சி, சாட்சியிடம் வக்கீல் ஒருவர் கேள்வி கேட்டு விசாரணை செய்கிறார்.

வக்கீல் : ஓடுற குதிரைக்கு கொம்பு ஒண்ணா? ரெண்டா?

சாட்சி  : குதிரைக்கு ஏதுங்க கொம்பு.

வக்கீல் : கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. கேட்ட கேள்விக்கு பதில். கொம்பு ஒண்ணா? ரெண்டா? அதைத்தான் சொல்லணும். 

இவ்வாறுதான் நீதிமன்ற நடவடிக்கை அக்காலத்தில் திருவிதாங்கூரில் இருந்ததாகத் தெரிவிக்கிறார்.

மொழிபெயர்ப்புகள்

   பிறமொழிக் கவிஞர்தம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதி, தமிழிலக்கியச் சாளரத்தின் வழியாக பிற நாட்டுக் காற்று உள்ளே வர அனுமதியளித்தவர் கவிமணி. பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் பாடல்களை ‘எட்வர்ட் பிட்ஸ் ஜெரால்டு’ ஆங்கிலத்தில் ஆக்கியுள்ளார். கவிமணி ஆங்கில நூலைத் தழுவித் தம் நூலைப் படைத்துள்ளார்.

ஆசிய ஜோதி

   சர். எட்வின் அர்னால்டு எழுதிய "The Light of Asia" என்னும் நூலைத் தழுவி எழுதப் பெற்ற அரிய நூல் "ஆசிய ஜோதி" ஆகும். இந்நூல் புத்தர் பெருமானின் வரலாற்றை விளக்குவது. சுத்தோதனர் மனைவி மாயாதேவி இறைவன் தன் மூலமாகப் பிறக்க விருப்பதைக் கனவாகக் காண்கிறாள். "Dreamed a strange dream" என்பதை "எந்நாளும் காணாத கனவொன்று கண்டாள்" எனக் கவிமணி, மொழியாக்கம் எனத் தோன்றா வகையில் ஆக்கியுள்ள அருமை போற்றத்தக்கது. இப்பாடலின் தழுவலாக கவிமணி எழுதிய கீழ்க்கண்ட பாடல் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.

வெய்யிற் கேற்ற நிழலுண்டு   
    வீசும் தென்றல் காற்றுண்டு 
கையில் கம்பன் கவியுண்டு 
   கலசம் நிறைய மதுவுண்டு 
தெய்வ கீதம் பலவுண்டு  
  தெரிந்து பாட நீயுண்டு 
வையந் தருமிவ் வனமன்றி  
  வாழும் சொர்க்கம் வேறுண்டோ!

ஆராய்ச்சிகள்

   கவிமணி பல்துறைகளிலும் கால் பதித்து விட வேண்டுமென முனைப்புடன் செயல்பட்டவர். ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதினார்.

   வையாபுரிப்பிள்ளை, இராஜாஜி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே. சண்முகம் போன்றோருடன் நட்பு அடிப்படையிலும், புலமைத்துவ அடிப்படையிலும் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தவர். மேற்கண்டவர்களின் வழியாகவும் பல்வேறு துறைகளைப் பற்றிய அறிவைச் சாகும்வரை சேகரித்துக் கொண்டிருந்தவர். அவருடைய படைப்புலகத்தையும், ஆய்வுலகத்தையும் நோக்கின் பாரதிக்கு இணையாக அவரும் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார் என்பது புலனாகிறது.

திரைப்படத் துறையில் கவிமணி

   இவராகத் திரைப்படத் துறையின் பக்கம் செல்லவில்லை. இவரது பல பாடல்களைத் திரை யுலகம் அவ்வப்போது பயன்படுத்தி வந்திருக்கிறது. இப்பாடல்கள் கூட திரைப்படத்திற்காக எழுதப்பட்டவை அல்ல. முதன்முதலில் என்.எஸ்.கே பிக்சர்ஸ் தயாரித்த பைத்தியக்காரன் (1947) படத்தில் இவரது பாடல் ஒன்று பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து 1951ல் இதே நிறுவனத்தின் தயாரிப்பான 'மணமகள்' படத்தில் ஒரு பாடல், பின்பு 'தாயுள்ளம்' என்கிற படத்தில்

கோயில் முழுதும் கண்டேன் - உயர் 
  கோபுரம் ஏரி கண்டேன்
தேவாதி தேவனை நான்
  எங்கெங்கும் தேடினும் கண்டிலனே

என்கிற ஒரு அற்புதமான பாடலை எம்.எல் வசந்தகுமாரி பாட அப்பாடல் மிகவும் பிரபலமாயிற்று. இவைதவிர 1952ல் வேலைக்காரன், 1955ல் கள்வனின் காதலி, 1956ல் கண்ணின் மணிகள், நன் நம்பிக்கை ஆகிய படங்களிலும் இவரது பாடல் இடம் பெற்றன.

'கள்வனின் காதலி' படத்தில் இவரது

வெய்யிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு

பாடல் பி. பானுமதி, கண்டசாலா குரலில் மிகவும் வெற்றியடைந்தது.

பாராட்டுகளும் விருதுகளும்

   "அழகு என்பதே உண்மை, உண்மை என்பதே அழகு" என்றார் ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ். கவிமணியின் பாடல்களில் உண்மையும் அழகும் கைகோர்த்துச் செல்வதை உணர முடியும். கரும்பினும் இனிமை பெற்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம், அரிய செல்வம், தெவிட்டாத அமிர்தம் எனப் புகழ்வார் இரசிகமணி டி.கே.சி.

“தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப்பெருமை” என சக காலத்தில் வாழ்ந்த நாமக்கல் கவிஞரால் பாராட்டப்பட்டவர்.

   "இவரது உண்மையுள்ளம், உண்மைப் பாடல்களின் மூலமாய் உண்மை வித்துகளைக் கற்பவர் மனத்தில் விதைத்து, உண்மைப் பயிரைச் செழித்தோங்கச் செய்கிறது. இவர் பாடல்களில் காணும் தெளிவும், இனிமையும், இவரது உள்ளத்திலேயுள்ள தெளிவு, இனிமை முதலிய சிறந்த இயல்புகளின் நிழற்படமேயாகும்," என்பார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.

   1940இல் தமிழ்ச்சங்கம் சென்னையில் நிகழ்த்திய 7வது ஆண்டு விழாவில் இவர்தம் கவிபாடும் புலமையைப் பாராட்டி, இவருக்குக் "கவிமணி" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.

முடிவுரை

   கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 78 ஆண்டுகள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து 26.09.1954ல் இம் மண்ணுலக வாழ்வினை நீத்தார். வாழ்நாள் முழுவதும் தமிழ்மணி ஒலித்துக் கொண்டிருந்த கவிமணியின் நா ஓய்ந்தது. எனினும் அவர் பாடல்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே உள்ளன.

Sunday, March 20, 2011

கவியும் கருத்தும்

சூரியன் வருவது யாராலே?
நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம்பிள்ளை
          சூரியன் வருவது யாராலே?
               சந்திரன் திரிவதும் எவராலே?
          காரிருள் வானில் மின்மினிபோல்
                கண்ணிற் படுவன அவைஎன்ன?
           பேரிடி மின்னல் எதனாலே?
                 பெருமழை பெய்வதும் எவராலே?
            யாரிதற் கெல்லாம் அதிகாரி?
                  அதைநாம் எண்ணிட வேண்டாவோ?            1

           தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்
                  தரையில் முளைத்திடும் புல் ஏது?
           மண்ணில் போட்டது விதையொன்று
                  மரஞ்செடி யாவது யாராலே?
           கண்ணில்தெரியாச் சிசுவை எல்லாம்
                 கருவில் வள்ர்பதுயார் வேலை?
           எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்
                 ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ?              2

           எத்தனை மிருகம்! எத்தனை மீன்!
                எத்தனை ஊர்வன பறப்பனபார்!
           எத்தனை பூச்சிகள் புழுவகைகள்!
               எண்ணத் தொலையாச் செடிகொடிகள்!
           எத்தனை நிறங்கள் உருவங்கள்!
              எல்லா வற்றையும் எண்ணுங்கால்
           அத்தனை யும்தர ஒருகர்த்தன்
              யாரோ எங்கோ இருப்பதுமெய்.                    3

           அல்லா வென்பார் சிலபேர்கள்;
               அரன் அரியென்பார் சிலபேர்கள்;
           வல்லான் அவன்பர மண்டலத்தில்
               வாழும் தந்தையென்பார்கள்;
           சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்’
               என்றும் சிலபேர் சொல்வாகள்;
           எல்லா மிப்படிப் பலபேசும்
               ஏதொ ஒருபொருள் இருக்கிறதே!                 4
           

          அந்தப் பொருளை நாம்நினைத்தே
              அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்,
          எந்தப் படியாய் எவர் அதனை
              எப்படித் தொழுதால் நமக்கென்ன?
          நிந்தை பிறரைப் பேசாமல்
              நினைவிலும் கெடுதல் செய்யாமல்
          வந்திப்போம் அதை வணங்கிடுவோம்;
              வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.             5
                       
   பொருள்
உலகில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். சூரியன், சந்திரன் ஆகியவற்றின் இயக்கத்திற்கும், மின்மினிப் பூச்சியைப் போல் கரிய இருள் சூழ்ந்த வானத்தில் மின்னும் ஏராளமான நட்சத்திரங்களின் ஒளிக்கும், இடி, மின்னல் மற்றும் மழை ஆகியவற்றுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். அதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
     தண்ணீர் தரையில் விழுந்ததும் புல் முளைப்பதற்கும், மண்ணில் போட்ட விதையானது மரம், செடியாக மாறுவதற்கும், நம் கண்களுக்குப் புலப்படாமல் கருவில் வளரும் குழந்தைக்கும் ஏதோ ஒரு விசை காரணமாக இருக்க வேண்டும்.
     உலகில் எத்தனையோ வகையான விலங்குகள், மீன்கள், ஊர்வன, பறப்பன, பூச்சிகள், புழு வகைகள், எண்ணிலடங்காச் செடி, கொடிகள் உள்ளன. அவற்றின் நிறங்களும், உருவங்களும் கூட வெவ்வேறானவை. இவை எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்கும்போது, அவற்றிற்கு ஒரு கடவுள் எங்கோ இருப்பது உண்மையாகும்.
    அக்கடவுளை அல்லா, சிவன், திருமால், இயேசு, புத்தன், அருகன் என அவரவர்க்கு விருப்பமான முறைகளில் அழைக்கின்றனர். அவர் உருவமும் அருவமும் இல்லாதவர் எனவும், ஆதியும் அந்தமும் இல்லாதவர் எனவும் கூறுவர். ஆனால் கடவுள் ஒருவர்தான்.
    அந்தக் கடவுளை நினைத்து, அனைவரும் அன்பாய்ப் பழகிடுவோம். கடவுளை அவரவர்களுக்கு விருப்பமான முறைகளில் வணங்கினாலும், மற்றவரைப் பற்றிக் குறை கூறாமலும், மனதாலும் மற்றவர்க்குத் தீங்கு நினைக்காமலும், அக்கடவுளர்களை வரவேற்போம். வணங்குவோம். நலமாய் வாழ்ந்திடுவோம்.