Thursday, March 31, 2011

கட்டுரை-2

கௌதமபுத்தர் வாழ்க்கை வரலாறு

முன்னுரை
   
உலகத்திலே அறம் குன்றி, மறம் வளர்ந்து மக்கள் அல்லலுறுங் காலங்களிலெல்லாம் புத்தர்கள் தோன்றி அறவழியைப் புகட்டி மக்களை நல்வழிப்படுத்துகிறார்கள் என்பதும், பற்பல கற்பகாலங்களில் கணக்கற்ற புத்தர்கள் தோன்றி அறநெறியை நாட்டிச் சென்றார்கள் என்பதும், இப்போது நடைபெறுகிற இந்தக் கற்பகாலத்திலே இருபத்தைந்து புத்தர்கள் தோன்றினார்கள் என்பதும் அவர்களுள் கடைசியாக வந்தவர் கௌதமபுத்தர் என்பதும் பௌத்தசமயக் கொள்கைகள். இனி வரப்போகிற புத்தரது பெயர் மயித்ரேய புத்தர் என்பதும், அவர் இப்போது துடிதலோகம் என்னும் தெய்வலோகத்திலே நாததேவர் என்னும் பெயருடன் இருக்கிறார் என்பதும் அந்த மதக் கொள்கைகளாம். பல புத்தர்கள் இருந்தார்கள் என்று பௌத்த சமய நூல்கள் கூறினாலும் சரித்திர நூலோர், கௌதமபுத்தரை மட்டும் சரித்திரகாலப் புத்தர் என்று கொள்கிறார்கள். கௌதமபுத்தருடைய வரலாறு தனி நூல்களாக எழுதப்பட்டுள்ளன வாகையினாலே, ஈண்டு அவரது வரலாற்றை மிகச் சுருக்கமாகக் கூறுகிறோம்.

கௌதமபுத்தர் வாழ்க்கை வரலாறு

  சாக்கிய குலத்திலே கௌதம குடும்பத்தைச் சேர்ந்த சுத்தோதனர் என்னும் அரசர் கபிலவத்து என்னும் ஊரை அரசாண்டு வந்தார். கபிலவத்து இமயமலை அடிவாரத்திலே இப்போதைய நேபாள நாட்டில் இருந்தது. சுத்தோதன அரசருக்கும் அவர் மனைவியராகிய மாயாதேவிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. கி.மு. ஆறாம் நூற்றாண்டிலே, அஃதாவது ஏறக்குறைய கி.மு 563இல் இந்தக் குழந்தை பிறந்ததாகச் சரித்திர நூலோர் கூறுவர். இக் குழவிக்குச் சித்தார்த்தர் என்று பெயர் சூட்டினார்கள். இக் குழந்தைதான் பிற்காலத்திலே புத்தர் பெருமானாக விளங்கியது.

  சித்தார்த்தர் பெரியவனானால் துறவியாய் விடுவார் என்று நிமித்திகர் கூறியதைக் கேட்டு, அரசன் மனம் வருந்தி, அக்குழந்தைக்குத் துறவு பூணும் எண்ணம் தோன்றாமலிருக்கும் பொருட்டு அதனைச் செல்வத்திலும் சுகபோகங்களிலும் திளைத்துவரச் செய்தார். உலக வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றாதபடி இன்ப சுகங்களைக் கொடுத்துவந்தார். குழந்தை வளர்ந்து பதினாறு வயதுள்ள குமாரனான போது அவருக்கு விருப்பமுள்ள ஓர் அரசிளங்குமரியை மணம் செய்து வைத்தார். சித்தார்த்த குமாரனுடைய இருபத்தொன்பதாவது ஆண்டிலே அவருக்கு இராகுலன் என்னும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அன்றைக்கே, சித்தார்த்தர் துறவு கொள்வதற்குக் காரணமான நிகழ்ச்சிகள் ஏற்பட்டன.

  வயது முதிர்ந்த "தொண்டு" கிழவர், கடும்பிணியினால் வருந்தும் நோயாளிகள், இறந்துபட்ட உடலாகிய பிணம் முதலிய துன்பக் காட்சிகளைச் சித்தார்த்தர் காண்பதற்கு வாய்ப்பில்லாதபடி அவரின் தந்தையார் ஏற்பாடு செய்திருந்தும், இக் காட்சிகளை யெல்லாம் அவர் காணும்படி நேரிட்டது. மிகவும் வயது முதிர்ந்த தள்ளாத கிழவர் ஒருவரை அவர் கண்டார். பிறகு, கொடிய நோயினால் வருந்தி வாய்விட்டலறிய ஒரு நோயாளியையும், உயிர் நீங்கிப் பிணமாகக் கிடந்த ஒரு மனித உடலினையும் அவர் காண நேரிட்டது. பின்னர், துறவி ஒருவரைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. துறவற வாழ்க்கை கவலையற்ற இன்ப வாழ்க்கை என்று அவர் கண்டார். மேலே கூறிய காட்சிகளை எல்லாம் காணப் பெற்ற சித்தார்த்தருக்கு, மனித வாழ்க்கை துன்பத்தில் சூழப்பட்டது என்றும், துன்ப வாழ்க்கையிலிருந்து நீங்கி நிலைத்த இன்பநெறியைக் கண்டுபிடித்து உலகத்தாரை உய்விக்க வேண்டும் என்றும் பேரவா உண்டாயிற்று. ஆகவே, அவர், அன்று நள்ளிரவிலே தம் ஒரே மகனையும், மனைவியையும், தாய் தந்தையரையும், இன்ப சுகங்களையும், அரச உரிமையையும், செல்வங்களையும், சுக போகங்களையும் துறந்து காட்டிற்குச் சென்றார்.

  முதலில் ஆளார காலாமர் என்பவர் இடத்திலும், பிறகு, உத்தக ராமபுத்திரர் என்பவர் இடத்திலும் சீடராக அமர்ந்து அவர்கள் காட்டிய வழியில் ஒழுகினார். விரைவிலே, அவர்கள் காட்டிய நெறி மக்களை உய்விக்கும் நெறியன்றென்று கண்டு, அவர்களை விட்டு உருவேல் என்னும் இடத்திற் சென்று, உண்ணாவிரதம் பூண்டு கடுந்தபசு செய்தார். அப்போது ஐந்து துறவிகள் இவரையடுத்து இவருடன் இருந்தார்கள். உணவு கொள்ளாமல் உடலை வாட்டி ஒடுக்கிக் கடுந்தபசு செய்தமையினாலே, குருதியும் தசையும் வற்றி எலும்பும் நரம்பும் தெரியும்படி உடல் நலிந்து வலிவு இல்லாமல் மயங்கி விழுந்தார். அதன்பிறகு, அளவுக்கு மிஞ்சி உடம்பைப் பட்டினியால் வாட்டுவது தவறு என்றும், அது மெய்ஞ்ஞானம் பெற வழியன்றென்றும் கண்டு அன்று முதல் சிறிதளவு உணவு கொள்ளத் துணிந்தார். இதனைக்கண்ட இவருடன் இருந்த பிக்குகள் இவரைவிட்டுப் போய்விட்டார்கள். கடைசியாகப் போதி (அரச) மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் இருந்தபோது மெய்ஞ்ஞான ஒளியைக் காணப் பெற்றார். மெய்ஞ்ஞான ஒளியைக் கண்ட சித்தார்த்தர் புத்தர் ஆனார். ஞானமாகிய போதி கைவரப்பெற்று, பிறவித் துன்பத்தைக் கடந்து பிறவாமையாகிய இன்ப நெறியைக் கண்டார். அப்போது அவருக்கு வயது முப்பத்தைந்து.

   பிறகு, புத்தர் தம்மை விட்டுச் சென்ற ஐந்து பிக்குகளைத் தேடிச்சென்று அவர்களுக்குத் தாம் கண்ட உண்மைகளைப் போதித்தார். அவர்கள் இவர்தம் உபதேசங்களைக் கேட்டு இவருக்குச் சீடர் ஆனார்கள். பிறகு, பல துறவிகள் இவருக்குச் சீடர் ஆயினர். அறுபதுபேர் சீடரானவுடன் அவர்களை ஊரெங்கும் அனுப்பித் தமது பௌத்த மதத்தைப் போதிக்கச் செய்தார். தாமும் பல இடங்களுக்குச் சென்று போதித்தார். இவரது புதிய உபதேசத்தைக் கேட்டு, வேறு மதத் துறவிகளும் கூட்டங் கூட்டமாகப் பௌத்த மதத்தில் சேர்ந்தார்கள். துறவிகள் மட்டும் அன்று; இல்லறத்தாராகிய அரசர்களும், நிலக் கிழார்களும், வணிகரும், செல்வந்தரும், பாமரமக்களும் பௌத்த மதத்தை மேற்கொண்டார்கள். நாற்பத்தைந்து ஆண்டுகள் நாடெங்கும் சுற்றித் திரிந்து புத்தர் தமது கொள்கையைப் போதித்தார்.

  துறவிகளாகிய பிக்குகளும் பிக்குணிகளும் ஒழுக வேண்டிய முறைகளை வகுத்தார். பிக்கு சங்கத்தை ஏற்படுத்தினார். அரசர்களும், பிரபுக்களும் பிக்குகள் தங்குவதற்கு விகாரைகளையும் பள்ளிகளையும் அமைத்துக் கொடுத்து நிலபுலங்களைத் தானம் வழங்கினார்கள்.   இவரது முதுமைக் காலத்தில் இவருக்கு மாறாகச் சிலர் கிளம்பி இவர் உண்டாக்கிய பௌத்த மதத்தில் பிளவு உண்டாக்க முயன்றனர். ஆனால், இவர் பிளவு ஏற்படாதபடி செய்தார்.

  புத்தர் பெருமான் தமது எண்பதாவது ஆண்டில் கி.மு 483 இல் ருசி நகரத்தில் நிர்வாண மோட்சம் அடைந்தார். ருசி நகரத்தார் இவர் உடலுக்கு இறுதிக் கடமைகளைச் செய்தார்கள். கொளுத்தப்பட்டு எஞ்சிய உடம்பின் சாம்பலும் எலும்பும் எட்டுப் பகுதியாகப் பகுக்கப்பட்டு எட்டு ஊர்களில் புதைக்கப்பட்டு அவற்றின்மேல் சைத்தியாலயங்கள் கட்டப் பட்டன.
  புத்தருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சாரிபுத்திரர், மொக்கலானார் (மௌத்தல்யானர்), மகாகாசிபர், உபாலி, ஆநந்தர், அனுருத்தர், காத்யானார் முதலானவர். மகத நாட்டரசர் பிம்பசாரரும், கோசல நாட்டரசர் பசேனதி (பிரசேனஜித்) என்பவரும் இவருடைய சீடர்களாயிருந்து இவரது மதம் பரவுவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்தார்கள்.
புத்தர் காட்டிய பாதை

  புத்தர் ஆன்மீக விழிப்புக்கான ஒரு பாதையைக் கற்றுக் கொடுத்ததோடு நாம் தினசரி வாழ்வில் பயன்படுத்த வேண்டிய ஒரு 'கோட்பாட்டையும்' காண்பித்தார். இந்தக் கோட்பாட்டுக்கான பாதையை, ஒன்றுக்கொன்று துணைநிற்கும் மூன்று அம்சங்களாகப் பிரிக்கலாம் - அவை நற்பண்பு, தியானம் மற்றும் அறிவுடைமை.

"நேர்மை இருக்கும் இடத்தில், அறிவுடைமை உள்ளது, அறிவுடைமை இருக்கும் இடத்தில் நேர்மை உள்ளது. நேர்மையானவர்களிடம் அறிவுடைமை உள்ளது, அறிஞர்களிடம் நேர்மை உள்ளது. அறிவுடைமையும் நேர்மையும் உலகில் சிறந்தவைகளாகக் கூறப்படுகின்றன."

1. நற்பண்பு

   புத்தரின் கோட்பாட்டுக்கான பாதையில் செல்ல விரும்புவோர், சம்பிரதாயப்படி உறுதி மொழி எடுக்கலாம். மூன்று புகலிடங்கள் மற்றும் ஐந்து நல்லொழுக்க உபதேசங்களைப் பௌத்த விகாரங்களுக்குச் (துறவிகள் வசிக்கும் ஆசிரமம்) சென்று ஆண் அல்லது பெண் துறவியிடம் உபதேசம் பெற்றுக் கொள்ளலாம். அல்லது நீங்களே உங்கள் வீட்டிலேயே உறுதி மொழி எடுத்துக் கொள்ளலாம். மூன்று புகலிடங்களை ஏற்றுக்கொண்டால் நம் வாழ்க்கையை அறிவுடைமை, வாய்மை மற்றும் நற்பண்பு ஆகிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இணங்கப் புத்தர் கற்றுக்கொடுத்தப்படி, புத்தரை முன்னுதாரணமாக வைத்து நடந்து கொள்ள வேண்டும். ஐந்து நல்லொழுக்க உபதேசங்கள் என்பன நம் தினசரி வாழ்வில் கடைபிடிக்க உதவும் பயிற்சி விதிகளாகும்:
   எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்த்தல், கொடுக்காத எப்பொருளையும் எடுப்பதைத் தவிர்த்தல், தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருத்தல், தவறான பேச்சு உரைக்காமல் இருத்தல் (பொய் சொல்வதும், வதந்தி கிளப்புவதும், கடுமையாகப் பேசுவதும், வம்பளப்பதும் தவிர்த்தல்), போதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்த்தல்.

  மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையில் வாழும் ஒருவருக்குத் தன்னடக்கமும் தியானஞ் செய்யக் கவனமாகப் பேணிவளர்க்க வேண்டிய நுண்ணிய உணர்வும் வளர்கிறது.  தியானம்தான் புத்தர் காட்டிய பாதையின் இரண்டாவது அம்சம்.

2. தியானம்

   பொதுவாக, பேச்சு வழக்கில் கூறப்படும் தியானம் என்பது மனப் பார்வையை ஒரு உருவத்தின் மேலோ, வார்த்தையின் மேலோ, தலைப்பின் மேலோ திரும்பத் திரும்பக் கவனம் செலுத்தி, மனதை அமைதிப்படுத்தி, அந்த உருவத்தின் அல்லது வார்த்தையின் பொருளைத் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்ப்பதுதான். பௌத்த ஆழ்ந்த அறிவு தியான (விபாஸனா) வழியில் இதற்கு மற்றொரு நோக்கமும் உள்ளது - அது மனதின் இயல்பான குணத்தை மேலும் புரிந்துக்கொள்வதுதான். தியானப் பொருளை ஒரு அசையாத குறியாக வைத்தால், மனதின் வெளித்தோற்றத்தில் நடைபெறும் செயல்களால் புதைக்கப் பட்டுள்ள அடிமனப்போக்கைத் தெளிவுபடுத்த உதவும். புத்தர் தனது சீடர்களைத் தங்கள் உடம்பையும், மனத்தையும் தியானப் பொருளாகப் பயன்படுத்த ஊக்கமளித்தார். உதாரணத்திற்கு, சாதாரணமாக மூச்செடுக்கும்போது உருவாகும் உணர்ச்சிகள் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு தியானப் பொருள். அசையாது உட்கார்ந்து, கண்களை மூடி, மூச்சின் மேல் கவனம் செலுத்தினால் ஒரு காலக் கட்டத்தில் தெளிவும் அமைதியும் தோன்றும். இந்த மனநிலையில், கொந்தளிக்கும் மன நிலைமைகள், எதிர் பார்ப்புகள், அடிக்கடி நிகழ்கிற மனோபாவங்கள் எல்லாம் தெளிவுபெற்று, அமைதியான ஆனால் தெளிவான விசாரணையினால் விடுபட்டு விடுகின்றன.

   தியான நிலையை ஓர் இடத்தில் அசையாது உட்கார்ந்து மட்டும் அல்லாமல், அன்றாடச் செயல்களைச் செய்யும்போதும் அடையலாம் என்று புத்தர் கற்றுத் தந்தார். கவனத்தை உடலின் அசைவுகளின் மேலும், ஏற்படும் உடல் உணர்ச்சிகளின் மேலும், மனதில் தோன்றும் மனோநிலைகள் மற்றும் எண்ணங்கள் மீதும் செலுத்தலாம். இந்த நடமாடும் கவனம் 'விழிப்புடன் இருத்தல்' என்று சொல்லப்படும்.

   விழிப்புடன் இருப்பதால் சாந்தமான ஒரு கவனத்தை அறிந்து கொள்கிறோம் என்று புத்தர் தெளிவுபடுத்தினார். உடலையும் மனதையும் மையமாக வைத்திருந்தாலும் இந்தக் கவனமானது எந்த ஒரு உடல் அல்லது மன அனுபவத்தோடும் பட்சபாதமில்லாமலும் கட்டுப்படாமலும் இருக்கிறது. இந்த விலகின மனநிலையானது பௌத்தர்களால் நிர்வாணா (பாலி மொழியில் நிப்பாணா) - அமைதியும் மகிழ்ச்சியும் கலந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதிக்கப்படாத மனநிலை - என்று கூறப்படுகிற மனநிலைக்கு ஒரு முன்னோடி. நிர்வாணா என்பது ஒரு இயற்கையான நிலை. நம் இயற்கையான நிலையோடு சேர வேண்டிய ஒன்று இல்லை. மன அழுத்தங்களும் குழம்பிய பழக்கங்களும் இல்லாத போது நம் மனநிலை அப்படித்தான் இருக்கும். உறக்கத்திலிருந்து விழிக்கும் போது எப்படிக் கனவு நிலை மறைகிறதோ, அதேபோல விழிப்புடன் இருப்பதால் தெளிவடையும் மனமானது ஆட்டிப்படைக்கும் எண்ணங்களாலும், சந்தேகங்களாலும், கவலைகளாலும் பாதிக்கப் படுவதில்லை.
   விழிப்புடன் இருத்தல் நாம் பயன்படுத்தும் அடிப்படையான கருவி என்றாலும், நம்மைப் பற்றிச் சரியான கருத்தினை நிறுவவும் விழிப்புடன் இருத்தலால் தெளிவாவதை மதிப்பீடு செய்யவும் பொதுவாகச் சில யோசனைக் குறிப்புகள் தேவைப்படுகிறது. இந்த குறிப்புகள்தான் புத்தரின் நுண்ணறிவுப் போதனைகளினால் கிடைக்கின்றன. 

3. நுண்ணறிவு

   பொதுவாக பயன்படுத்தப்படும் புத்தரின் நுண்ணறிவுப் போதனைகள் கடவுளைப் பற்றிய அல்லது அடிப்படையான உண்மையைப் பற்றிய அறிக்கைகள் அல்ல. அப்படிப்பட்ட அறிக்கைகளாக இருந்தால் அது கருத்து வேறுபாடுகளுக்கும், முரண்பட்ட பேச்சு வார்த்தைக்கும், வன்செயலுக்கும்கூட இடம் கொடுக்கும் என்று புத்தர் கருதினார். அதற்கு மாறாகப் பௌத்த நுண்ணறிவு நம்பிக்கை என்று ஒன்றை ஏற்றுக் கொள்ளாமல் நம் வாழ்க்கையைப் பற்றி நாமே என்ன கவனிக்கிறோமோ அதை விளக்குகிறது. பௌத்தப் போதனைகள் நமது அனுபவங்களோடு பரிசோதனை செய்து பார்க்கப்பட வேண்டும். பல்வேறு மக்கள் வாய்மையைப் பலவிதமாக வெளிப்படுத்துவார்கள்; நாம் எதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றால் நம் அனுபவங்கள் எவ்வளவு நியாயப் பூர்வமானவையாக இருக்கின்றன என்பதும், அவை நமக்கு மேலும் அறிவூட்டவும் கருணையோடு வாழ்வை நடத்தவும் வழி வகுக்கிறதா என்பதுதான். போதனைகள் மனக்கசப்பு நீங்க வழிவகுக்கும் கருவிகளாக விளங்குகின்றன. மனம் தெளிவான பிறகு அடிப்படையான உண்மை - அதை எவ்விதத்தில் வெளிப்படுத்தி னாலும் சரி - வெளிப்படையாகிறது.

முடிவுரை

   பலவிதமான சமய வழக்கங்கள் பௌத்த மதத்தோடு இணைக்கப் பட்டுள்ளன. ஆனால் இவை எல்லாம் 'சித்தாத்த கோதமா' என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் வாழ்ந்த ஞானியின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவர் தான் பிற்காலத்தில் 'புத்தர்' - அதாவது 'விழிப்பு அடைந்தவர்' என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவர் தன் சுய முயற்சியாலேயே ஞானம் பெற்றார். புத்தர் எதையும் எழுதி வைக்கவில்லை. ஆனால் அவர் கற்பித்த போற்றத்தக்க வாய்மை (தர்மம்) அவர் காண்பித்த சமய வழியைப் பின்பற்றிய சீடர்களால் (சங்கம் என்று அழைக்கப்படுவர்) வாய்மொழிச் சொல்லாகப் பரவி உலகில் நிலை பெற்றது. அவர் தம் வாழ்நாளில் 45 ஆண்டுகள் சங்கத்திற்கு வழி காட்டியாக விளங்கினார்.

No comments:

Post a Comment